Mas Sehat | Blog Tentang Kesehatan | Mas Sehat ~ Blog Tentang Kesehatan | www.mas-sehat.com
Sekar_Swiss

சித்த மருத்துவம் - சித்த மருத்துவ குறிப்புகள் 1

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. 

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். 

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். 

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். 

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். 

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல் 

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.